Breaking News

ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை


எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியது. இறையச்சமுடையவர்களுக்கே இறுதி முடிவு (சாதகமாய்) அமையும். இறுதி இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இதர (இறைத்தூதர்களான) நபிமார்கள், ரசூல்மார்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
இறை வாழ்த்துக்குப் பின்!
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வழிவழியாக எடுத்துரைக்கப்பட்டுவரும் மார்க்க வழிமுறைகள், சட்ட திட்டங்கள், அவற்றிலுள்ள(படி செயல்படுவதால் கிடைக்கப் பெறும்) நற்பலன்கள், (கைவிடுவதால் ஏற்படும்) தண்டனைகள், ஆர்வமூட்டுகின்றவை, எச்சரிக்கின்றவை ஆகிய பலதரப்பட்ட நபிமொழிகளை, அந்தத் துறை அறிஞர்கள் கையாண்டுவரும் அறிவிப்பாளர் தொடர்களுடன் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஆய்வு செய்ய வேண்டுமென -இறை நாட்டப்படி- நீங்கள் விரும்பினீர்கள்.1
அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டுவானாக!

அவற்றில் எதுவும் விடுபடாமல் அனைத்தும் ஒரே தொகுப்பாய்த் திரட்டப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினீர்கள். அத்தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிகளை, அதிகமாகத் திரும்பக் கூறாமல் நான் விளக்கிட வேண்டும் எனவும் என்னிடம் கோரினீர்கள். அவ்வாறு, கூறியதைத் திரும்பக் கூறுவது, நபிமொழிகளிலிருந்து எதை விளங்கிக் கொள்ளவும் கணிக்கவும் நீங்கள் எண்ணுகிறீர்களோ அதிலிருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிடும் என்றும் கூறினீர்கள்.
அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்துவானாக!
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இப்பணி குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் ஆழமாக யோசித்துப் பார்த்தேன். அல்லாஹ் நாடினால், இதன் மூலம் இம்மைப் பயனும் மறுமைப் பரிசும் கிடைக்கும் (என்ற முடிவுக்கு வந்தேன்).
இந்தக் கடினமான பணியை ஏற்குமாறு என்னிடம் நீங்கள் கோரியபோது நான் எண்ணிப் பார்த்தேன்:
ஒருகால் இப்பணியை மேற் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து, அதை நான் நிறைவு செய்வேன் என விதியில் எழுதப் பெற்றிருந்தால், மற்ற யாரையும்விட அதனால் பயனடையும் முதல் ஆள் நானாகவே இருப்பேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. விரிவை அஞ்சிச் சுருக்கமாகக் கூறுகிறேன்:
அதிக எண்ணிக்கையிலான ஹதீஸ்களை எடுத்தாள்வதை விடக் குறைந்த ஹதீஸ்களை மனனமிடுவதும் பாதுகாப்பதும்தான் மக்களுக்கு சுலபமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, பகுப்பாற்றல் இல்லாத, பிறர் உணர்த்தினால் தவிர பாகுபடுத்திப் பார்க்க இயலாத பாமரர்களுக்கு இதுவே உகந்ததாகும். இதுதான் இந்தத் துறையின் யதார்த்தம் என்றாகிவிட்ட பின், ஆதாரமற்றதை அதிகமாகக் கூறுவதை விடுத்துக் குறைவே ஆனாலும் சரியானதைக் கூறுவதே மக்களுக்கு ஏற்றதாகும்.
இந்த வகை ஹதீஸ்களை அதிகமாக அறிவிப்பதாலும், கூறியதையே திரும்பக் கூறுவதாலும் மக்களில் சிலருக்கு வேண்டுமானால் ஒரு சில நன்மைகள் பயக்கலாம். ஹதீஸ் கலையில் ஓரளவு ஞானமும் காரண காரியங்கள் பற்றிய அறிவும் உள்ள அவர்கள் வேண்டுமானால் அதிகமான நபிமொழிகளைத் திரட்டுவதனால் கிடைக்கும் பலனை -அல்லாஹ் நாடினால்- அடைந்து கொள்ளக்கூடும். அதே நேரத்தில், இதற்கு மாற்றமான நிலையில் உள்ள சாமானிய மக்கள் அதிக எண்ணிக்கையில் நபிமொழிகளைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாகும். அவர்களால் குறைந்த அளவை அறிவதே இயலாத காரியமல்லவா?
இனி -அல்லாஹ் நாடினால்- நீங்கள் கேட்டுக்கொண்டபடி நபிமொழிகளைப் பதிவு செய்து தொகுத்து வழங்கப் போகிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள செய்திகளை மூன்று வகைகளாகவும், அவற்றின் அறிவிப்பாளர்களை மூன்று தரத்தினராகவும் பிரித்திருக்கிறோம்.2 அவசியம் ஏற்பட்டால் தவிர திரும்பக் கூறலைத் தவிர்த்துள்ளோம். எந்த இடத்தில் ஒரு ஹதீஸைத் திரும்பக் கூறுவதால் மட்டுமே கூடுதல் பொருள் கிடைக்குமோ, அல்லது
ஓர் அறிவிப்பாளர் தொடரை ஒட்டி மற்றோர் அறிவிப்பாளர் தொடரையும் சேர்த்துக் கூறுவதால் கூடுதல் பலம் கிட்டுமோ அந்த இடத்தில் மட்டும் திரும்பக் கூறியுள்ளோம்.
ஏனெனில், ஒரு ஹதீஸில் கிடைக்கின்ற அவசியமான கூடுதல் பொருள், ஒரு தனியான ஹதீஸின் அந்தஸ்தைப் பெறும். ஆகவே, அந்தக் கூடுதல் அம்சத்திற்காக அந்த ஹதீஸையே திரும்பக் கூறவேண்டிய கட்டாயம் நேருகிறது. அல்லது சாத்தியப்படுமானால், முழு ஹதீஸிலிருந்து தேவையான பகுதியை மட்டும் பிரித்துச் சுருக்கி வழங்கியுள்ளோம். இருப்பினும், அவ்வாறு பிரிப்பது சில இடங்களில் கடினம். அப்போது முழு ஹதீஸை அப்படியே திருப்பிக் கூறுவதுதான் பொருத்தமாயிருக்கும். ஆக, அவசியமில்லாமல் திரும்பக் கூறுகின்ற வேலையை நாம் செய்ய மாட்டோம், இன்ஷா அல்லாஹ்.
முதல் வகை: (அறிவிப்பாளர் தொடரில்) குறைபாடுகள் ஏதுமில்லாத, சந்தேகத்திற்கப்பாற்பட்ட ஹதீஸ்களுக்கு முதலிடம் அளிக்க முனைந்துள்ளோம். அதன் அறிவிப்பாளர்கள் ஹதீஸ் துறையில் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களாவர். பெரும்பாலான நபிமொழி இயலாரின் அறிவிப்புகளில் வெளிப்படையாகக் காணப்படுவதைப் போன்று, இவர்களின் அறிவிப்புகளில் பலத்த வேறுபாடோ, மோசமான கலப்போ இராது.
(இரண்டாம் வகை:) இந்த முதல் வகை ஹதீஸ்களை முழுமையாக நாம் இடம்பெறச் செய்த பின் (இரண்டாம் வகையைச் சேர்ந்த) சில ஹதீஸ்களை அடுத்து இடம்பெறச் செய்வோம். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்களில் சிலர் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் முதல் வகை அறிவிப்பாளர்களைப் போன்று நினைவாற்றலும் பாண்டித்தியமும் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். தரத்தில் அவர்களைவிட இவர்கள் குறைந்தவர்களாக இருப்பினும், நாணயத்திற்கெதிரான எந்தக் குறையும் இவர்களிடம் வெளிப்படையாகக் காணப்படவில்லை. மேலும் உண்மை, கல்வியாற்றல் ஆகிய தகுதிகள் இவர்களிடமும் உண்டு.
அதாஉ பின் அஸ்ஸாயிப் (ரஹ்),3 யஸீத் பின் அபீஸியாத் (ரஹ்),4 லைஸ் பின் அபீசுலைம் (ரஹ்)5 போன்ற அறிவிப்பாளர்களை இரண்டாம் வகையினருக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவர்கள் கல்வி, குறையின்மை ஆகிய தகுதிகளில் அறிஞர்களிடையே அறியப்பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது உண்மையே. ஆனாலும், சம காலத்தவர்களில் நினைவாற்றலிலும் புலமையிலும் இவர்களைவிட முதல் வகையினரே தரத்தில் உயர்ந்தவர்களாக விளங்கினர். ஏனெனில், நினைவாற்றலும் புலமையும்தான் கல்வியாளர்களிடம் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. (இதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமுண்டு.)
மேலே குறிப்பிட்ட மூவரோடு மற்ற மூவரை ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும்; உண்மை புரியும். அதாஉ, யஸீத், லைஸ் (ரஹ்) ஆகிய அந்த மூவரையும் மன்ஸூர் பின் அல்முஃதமிர் (ரஹ்),6 சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்),7 இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்)8 ஆகியோருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஹதீஸை உறுதியுடன் மனனமிட்டு அறிவிப்பதில் இரு குழுவினரிடையே வேறுபாடு இருப்பதைக் காணலாம். இந்த விஷயத்தில் இவர்களை அவர்கள் நெருங்கவே முடியாது.
இதில் நபிமொழி இயல் மேதைகளிடையே எந்த ஐயமும் கிடையாது. ஏனெனில், மன்ஸூர் (ரஹ்), அஃமஷ் (ரஹ்), இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) ஆகியோரின் சீரான நினைவாற்றலும் அவர்களுடைய அறிவிப்புகளில் அவர்களுக்கிருந்த உறுதிப்பாடும் நபிமொழி இயல் அறிஞர்களிடையே பிரசித்தி பெற்றவையாகும். ஆனால், இதைப் போன்ற நிலையை அதாஉ (ரஹ்), யஸீத் (ரஹ்), லைஸ் (ரஹ்) ஆகியோரிடம் அவர்கள் காணவில்லை.
இதே நிலைதான் இப்னு அவ்ன் (ரஹ்),9 அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்)10 ஆகியோரை, அவர்களுடைய சம காலத்தவர்களான அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்),11 அஷ்அஸ் அல்ஹும்ரானீ (ரஹ்)12 ஆகியோருடன் ஒப்பிடும்போதும் காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஹசன் அல்பசரி (ரஹ்),13 இப்னு சீரீன் (ரஹ்)14 ஆகியோருடைய மாணவர்கள் தாம். இருப்பினும், சிறப்பிலும் சீரான அறிவிப்பிலும் அவர்களிடையே இடைவெளி உண்டு. இத்தனைக்கும் அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்) அவர்களும் அஷ்அஸ் (ரஹ்) அவர்களும் கல்வியாளர் மத்தியில் உண்மை மற்றும் நம்பகத் தன்மை ஆகியவற்றில் தட்டிக் கழிக்கப்பட்டவர்கள் அல்லர். ஆயினும், ஏற்கெனவே நாம் குறிப்பிட்டதைப் போன்று நினைவாற்றல் தான் கல்வியாளர்களிடம் சிறப்புக்கு அளவு கோலாகும்.
எடுத்துக்காட்டாக இவர்களுடைய பெயர்களை நாம் குறிப்பிட்டதற்குக் காரணம், நபிமொழி அறிவிப்பாளர்களை வரிசைப் படுத்தும்போது கல்வியாளர்கள் எந்த வழியைக் கையாள்கிறார்கள் என்று அறியாத சிலருக்கு இது ஓர் அடையாளமாக இருக்கட்டும் என்பதேயாகும். ஆக, இந்தத் துறையில் உயர் இடத்தை வகிக்கும் ஒருவர் அவரது தகுதியிலிருந்து இறக்கப்பட்டு விடவும் கூடாது; கீழ்நிலையிலுள்ள ஒருவர் அவரது தகுதிக்கு மேலே உயர்த்தப் பட்டுவிடவும் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரது தகுதியும் மரியாதையும் அளிக்கப்பட வேண்டும். (இதுதான் நமது நோக்கமாகும்.)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: நாங்கள் மக்களுக்கு அவரவரது அந்தஸ்தை அளித்திட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். குர்ஆனும் இதையே கூறுகிறது: கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே (அவர்களைவிட) அறிந்தவன் ஒருவன் இருக்கின்றான் (12:76).
ஆக, மேலே நாம் குறிப்பிட்ட முறைப்படி நீங்கள் கேட்டுக்கொண்ட ஹதீஸ்களை (இந்நூலில்) தொகுத்து வழங்க உள்ளோம்.
(மூன்றாம் வகை:) நபிமொழி இயலார் அனைவரால், அல்லது அநேகரால் சந்தேகத்திற்குரியவர்களாகக் கருதப்படுவோர் அறிவித்துள்ள ஹதீஸ்கள் மூன்றாம் வகையாகும். இத்தகையோரின் ஹதீஸ்களை இங்கு நாம் பதிவு செய்யப்போவதில்லை. இந்த வகையினருக்கு
அப்துல்லாஹ் பின் மிஸ்வர் அபீஜஅஃபர் அல்மதாயினீ,
அம்ர் பின் காலித்,
அப்துல் குத்தூஸ் அஷ்ஷாமீ,
முஹம்மத் பின் சயீத் அல்மஸ்லூப்,
ஃகியாஸ் பின் இப்ராஹீம்,
சுலைமான் பின் அம்ர் அபீதாவூத் அந்நகஈ
போன்றோரை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.
இவர்கள் அனைவரும் ஹதீஸ்களைப் புனைந்து இட்டுக்கட்டிக் கூறுபவர்களாய் இருந்தனர். (எனவே, இத்தகையோர் வழியாக அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களை நாம் இந்நூலில் இடம்பெறச் செய்ய மாட்டோம்.) அவ்வாறே, யார் அறிவிக்கும் ஹதீஸில் பெரும்பாலும் தவறோ மறுப்போ இருக்குமோ அவர்களின் ஹதீஸ்களையும் நாம் தொடமாட்டோம்.
ஒருவரது ஹதீஸ் மறுக்கப்பட்டது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், அவரது அறிவிப்பை நல்ல நினைவாற்றலும் நற் பெயருமுடைய மற்றவர்களின் அறிவிப்போடு ஒத்துப்பார்த்தால், அவர்களது அறிவிப்புக்கு இவருடைய அறிவிப்பு முரண்படும்; அல்லது அதனுடன் இது அநேகமாக ஒத்துப்போகாது. (சிறிதளவே ஒத்திருக்கும்.) ஒருவர் அறிவிக்கும் ஹதீஸில் பெரும்பாலானது இந்நிலையில் இருந்தால், அவரது ஹதீஸ் ஏற்கப்படாது; எடுத்தாளப்படாது; மாறாக, அது கைவிடப்படும்.
அப்துல்லாஹ் பின் முஹர்ரர்,
யஹ்யா பின் அபீஉனைசா,
ஜர்ராஹ் பின் அல்மின்ஹால் அபுல் அத்தூஃப்,
அப்பாத் பின் கஸீர்,
ஹுசைன் பின் அப்தில்லாஹ் பின் ளுமைரா,
உமர் பின் சுஹ்பான்
போன்றோர் மறுக்கப்பட்ட இவ்வகை அறிவிப்பாளர்களில் அடங்குவர். எனவே, இத்தகையோரின் அறிவிப்புகளையும் இவர்களைப் போன்ற மறுக்கப்பட்ட (முன்கர்) ஹதீஸ்களை அறிவிப்பவர்களின் ஹதீஸ்களையும் நாம் பொருட்படுத்த மாட்டோம்; அவற்றில் கவனம் செலுத்த மாட்டோம்.
ஏனெனில், தனிநபர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்கப்பட வேண்டுமாயின் கல்வியறிவும் நினைவாற்றலும் மிக்க நம்பத் தகுந்த அறிவிப்பாளர்களின் அறிவிப்புக்கு அவருடைய அறிவிப்பு ஒரு சில விஷயங்களிலோ அல்லது முழுவதுமாகவோ ஒத்துப்போக வேண்டும். இவ்வாறு அவரது அறிவிப்பு முரண்படாத பட்சத்தில் அவர் தம் சக அறிவிப்பாளர்களை விட அதிகப்படியாக ஏதேனும் அறிவித்தால் அதுவும் ஏற்கப்படும்.
இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்),15 ஹிஷாம் பின் உர்வா (ரஹ்)16 போன்றோர் (இத்துறையில்) மதிப்புக்குரியவர்கள் ஆவர். அதிக எண்ணிக்கையிலான அவர்களுடைய மாணவர்கள் நல்ல நினைவாற்றல் மிக்கவர்களாகவும், அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களையும் மற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களையும் உறுதிப்பட அறிவிப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய ஹதீஸ்கள் கல்வியாளரிடையே பரவலாகவும் விரிவாகவும் பேசப்படுகின்றன. அவர்களிடமிருந்து அவர்களுடைய மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன; முரண்படுவதில்லை. இந்நிலையில், அவ்விருவரிடமிருந்தோ, அல்லது ஒருவரிடமிருந்தோ சில ஹதீஸ்களை ஒருவர் அறிவிக்கிறார். அவை அவர்களுடைய மாணவர்களில் எவருக்கும் தெரியவுமில்லை; அவர்களிடமுள்ள சரியான ஹதீஸ்களுக்கு உடன்படவுமில்லை என்றால், இந்த வகை ஹதீஸ்களை ஏற்கக் கூடாது.
இதுவரை நாம் நபிமொழி இயல் கொள்கைகள் சிலவற்றை விவரித்தோம். இத்துறை அறிஞர்கள் வழியில் நடக்க விரும்புவோருக்கு இந்த விளக்கம் போதும். இனி அல்லாஹ் நாடினால், சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள் இடம்பெறும் இடங்களில் தேவையான விளக்கங்களை ஆங்காங்கே அளிப்போம்.
அடுத்து -அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!-
தம்மை ஹதீஸ் அறிவிப்பாளர் என்று காட்டிக் கொள்வோரில் பலர் ஒரு விஷயத்தை நன்கறிந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதாவது அவர்கள் அப்பாவி மக்களுக்கு அறிவிக்கும் ஹதீஸ்களில் பெரும்பாலானவை நிராகரிப்பட்டவையும் திருப்தியற்றோரிடமிருந்து அறிவிக்கப்படுபவையும் ஆகும். மாலிக் பின் அனஸ் (ரஹ்),17 ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்),18 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்),19 யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்),20 அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்)21 போன்ற நபிமொழி வல்லுநர்கள் யாரிடமிருந்து அறிவிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார்களோ அவர்களிடமிருந்தே தாங்கள் ஹதீஸ்களை அறிவிப்பதாக இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பலவீனமான ஹதீஸ்களையும் மறுக்கப்பட்ட அறிவிப்புகளையும் கைவிட்டு, உண்மை, நாணயம் ஆகியவற்றில் பெயர் பெற்ற நம்பத் தகுந்தோர் அறிவித்துள்ள பிரபலமான சரியான தகவல்களை மட்டுமே அறிவிப்பது இவர்களின் கடமையாயிருக்க, அதில் முறை தவறி நடந்து கொள்கிறார்கள்.
இந்நிலையை நாம் கண்டதால்தான் நீங்கள் கோரியபடி ஹதீஸ்களைத் தரம் பிரித்துக் காட்டிச் சரியானவற்றைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டியதாயிற்று. பலவீனமானதும் அறியப்படாததுமான அறிவிப்பாளர் தொடர்களில் வரும் மறுக்கப்பட்ட செய்திகளை, அவற்றின் குறைகளைக் கண்டறிய முடியா மக்களிடம் அவர்கள் பரப்பி வருவதால்தான் உங்கள் கோரிக்கையை ஏற்பது நமக்கு எளிதாயிற்று.

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .